மும்பையில் கடந்த சில வாரங்களாகவே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்நகர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசிய தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும்படி பெரும்பாலும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மும்பையின் புறநகர் பகுதிகளில் மூன்று மணி நேரத்தில் 50மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் ஹோசாலிகர் அறிவித்துள்ளார். மும்பை மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல நகரங்களில் குறிப்பாக தானே, பால்கார் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் இன்னும் அதிகபட்ச மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
மும்பையின் பல முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. எனவே கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் அல்லது அக்டோபர் வரை மும்பையில் மழை பெய்யும் என்றாலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது