தேர்தல் அதிகாரிகளை நியமிக்க சொல்லி தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது தொடர்பான வழக்குகளில் தேர்தல் ஆணையம் வரும் நவம்பர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவித்துவிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.
அதன்படி தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்னர் தேர்தலுக்கு தேவையான வண்ண வாக்குச்சீட்டுகளை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவித்தது. 30 டன் வெளிர் நீல வாக்குச் சீட்டுகள், 56 டன் இளம் சிவப்பு நிற வாக்குச் சீட்டுகள், வாக்குச் சீட்டு காகிதங்கள் 46 டன் எனக் கொள்முதல் செய்ய இருக்கிறது. இதனால் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்துவது உறுதி எனத் தெரிகிறது. இதையடுத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் தேர்தல் அதிகாரிகள், உதவித் தேர்தல் அதிகாரிகளை நியமிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது.