சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது மட்டுமன்றி அதிகாலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, குரோம்பேட்டை, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், அண்ணாநகர், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் புறநகரிலும் கனமழை கொட்டியது.
இந்த நிலையில் சென்னையில் விடிய விடிய மழை பெய்த போதிலும் வழக்கம்போல் பள்ளிகளில் இருக்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார். அதேபோல் திருவள்ளூரிலும் பள்ளிகள் இன்று இயங்கும் என அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டியதால் இன்று பள்ளி விடுமுறை இருக்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்த்த மாணவ-மாணவிகளுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றமாக உள்ளது. எனவே இந்த மழையிலும் அவர்கள் பள்ளிக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்