ஆஸ்திரேலிய நாட்டின் சுற்றுலா திட்டமான ரூ.1140 கோடி திட்டத்திற்கு, இந்தியாவிற்கான தூதராக சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஆஸ்திரேலிய அரசு பல்வேறு நாடுகளின் பிரபலங்களைத் தூதர்களாக நியமித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 27 வயதான சாரா டெண்டுல்கர், சர்வதேச பயணிகளை ஆஸ்திரேலியாவை சுற்றிப் பார்க்க அழைக்கும் விளம்பர பணியில் ஈடுபடுவார். இதற்காக அவர் உலகெங்கும் பயணம் செய்யவிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஏற்கெனவே பிரபலமான சாரா, இந்திய இளைஞர்களை ஆஸ்திரேலியாவை நோக்கி ஈர்க்கும் வாய்ப்பு அதிகம். இது, இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய நாட்டின் சுற்றுலா துறையின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்ட சாரா டெண்டுல்கருக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.