ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யூடியூப் பார்க்க தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டு பாராளுமன்றம் நிறைவேற்ற இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக் டாக், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தடைப் பட்டியலில் தற்போது யூடியூப்பும் இடம்பெறும் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
சிறுவர்கள் சீரழிவதை தடுக்கும் வகையில், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்கும் சட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா நிறைவேற்றியது. தற்போது இந்த மசோதாவில் யூடியூப்பும் சேர்க்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இனிமேல் யூடியூபில் கணக்கு வைத்திருப்பவர்கள் 16 வயது கடந்தவர்களா என்பதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த சட்டம் வரும் டிசம்பர் முதல் அமலுக்கு வர இருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா நிறைவேற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கை, குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆஸ்திரேலியாவின் தீவிர முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த தடை சிறுவர்களின் டிஜிட்டல் அணுகல் மற்றும் கற்றலில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.