கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை கால உற்சவம் நடைபெற்று வருகிறது. தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 25 நாட்களை கடந்த நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிடுகிறது.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பக்தர்களின் நலன் கருதியும், கோவில் தந்திரிகள் மற்றும் தேவசம் வாரிய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, தரிசன நேரத்தை நீட்டிக்க தேவசம் வாரியம் முடிவு செய்துள்ளது.
மாற்றப்பட்ட நேரத்தின்படி, பகலில் நடை அடைக்கப்படும் நேரம் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவில் அடைக்கப்படும் நேரம் 11 மணிக்குப் பதிலாக 11.15 மணிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புல்மேடு வழித்தடத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதால், அந்த பாதையைப் பயன்படுத்தும் பக்தர்கள் உரக்குழி அருவி பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.