திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட வாசல் தரிசனத்திற்கான ஏற்பாடுகள் குறித்து திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் தகவல் அளித்துள்ளார்.
டிசம்பர் 30, முதல் ஜனவரி 8, வரையிலான 10 நாட்களில் மொத்தம் 182 மணி நேரம் நடைபெறும் வைகுண்ட துவார தரிசனத்தில், 164 மணி நேரம் பொது பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 7.70 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களுக்கான சர்வ தரிசன டோக்கன்கள் மின்னணு டிப் முறையில் வழங்கப்பட்டுவிட்டன. சுமார் 25 லட்சம் பக்தர்கள் இதற்காக பதிவு செய்திருந்தனர்.
முதல் மூன்று நாட்களுக்கு எஸ்.இ.டி. மற்றும் ஸ்ரீவாணி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த 10 நாட்களிலும் திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன்கள் நேரடியாக வழங்கப்படாது.
மேலும், ஜனவரி 2 முதல் 8 வரை சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு, நேரில் வரும் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே தரிசனம் ஒதுக்கப்படும். ஜனவரி 6, 7, 8 ஆகிய உள்ளூர் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.