டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் இருக்கும் விசா அலுவலகம் உளவு நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து பயன்படுத்தப்படுவது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹரியானாவின் பால்வல் காவல்துறையினர் செப்டம்பர் 30 அன்று வசீம் அக்ரம் மற்றும் தௌஃபிக் ஆகிய இரண்டு இளைஞர்களை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்துள்ளனர்.
இந்த கைது தொடர்பான விசாரணைகளில், கைதான இருவரும் பாகிஸ்தான் விசா ஏற்பாடு செய்து தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்துள்ளனர். வசூலிக்கப்பட்ட இந்த நிதியில் பெரும் பகுதி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயர் தூதரக அதிகாரி டானிஷ் என்பவர் உட்பட பல அதிகாரிகள் இந்த நிதியை பெற்றுக்கொண்டு, பின்னர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்குள் நுழையும் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிதிகள் மூலம் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் இந்தியாவில் தங்குவதற்கு உதவியதுடன், அவர்களின் உளவு வலையமைப்பை விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
முன்னதாக ஜோதி மல்ஹோத்ரா என்ற யூடியூபரும் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் அதே காரணத்திற்காக கைதாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.