குருகிராமில் உள்ள நில ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையின் விசாரணைக்கு காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா இன்று நேரில் ஆஜராகினார்.
டெல்லியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து, அமலாக்கத்துறை அலுவலகம் வரை நடந்து செல்வதை காண முடிந்தது. அமலாக்கத்துறை அலுவலகம் அவரது வீட்டின் அருகே இருந்ததால் அவர் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், குருகிராமில் ஷிகோபூர் பகுதியில் 3.5 ஏக்கர் நிலத்தை ரூ.7.5 கோடிக்கு சட்டவிரோதமாக வாங்கியதாக ஹரியானா போலீசார் ஏற்கனவே 2018ஆம் ஆண்டில் வழக்கு பதிந்து வைத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்புழக்கம் குறித்த பிரச்சனை தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் படி, அவர் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.