கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வை எதிர்த்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளது. இதனால், தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள், கர்நாடக எல்லையான ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புதிய டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வு குறித்து இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக லாரி உரிமையாளர்கள், ஏப். 15-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று கர்நாடகத்தில் அனைத்து லாரிகளும் வேலை நிறுத்தம் செய்துள்ளன. இதனால், தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் உள்பட, அனைத்து லாரிகளும் ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக வழியாக தமிழகத்திற்கு வர வேண்டிய லாரிகளும் அந்த மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், ஒசூரில் இருந்து 2000க்கும் மேற்பட்ட கனிம வளங்கள், ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருள்கள் கர்நாடகத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும், தமிழகத்தில் விளையும் காய்கறிகள், கேரளம் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளும் ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.