செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பான 'வெள்ளைக் காலர் தீவிரவாத வலையமைப்பு' மீதான விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தில்லி காவல் துறையினர் ஹரியானாவின் நூஹ் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி, மருத்துவர் முஸ்தகீம் மற்றும் எம்.பி.பி.எஸ். மாணவர் முகமது ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், குண்டுவெடிப்பில் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் மருத்துவர் உமர் உன் நபி உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. முஸ்தகீம், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றவர். இந்த வழக்கில் மருத்துவர் ரியான் உட்படச் சமீப நாட்களில் மட்டும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனை நடவடிக்கையின்போது, சுமார் 2,900 கிலோகிராம் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வலையமைப்பு ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்திரப்பிரதேசம் முழுவதும் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முக்கிய சந்தேக நபர்கள் சதித்திட்டத்தை ஒருங்கிணைக்க சுவிட்சர்லாந்து தளமாக கொண்ட ரகசியச் செய்தி செயலியைப் பயன்படுத்தியதும் அம்பலமாகியுள்ளது.
குண்டுவெடித்த வாகனத்தை ஓட்டி வந்தவர் மருத்துவர் நபிதான் என்பதை டிஎன்ஏ சோதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அல் ஃபலாஹ் பல்கலைக்கழக வளாகத்தின் பயன்பாடுகள் குறித்தும் வருவாய்த்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.