டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் டாக்டர் முகமது உமர், வெடிவிபத்துக்கு முன் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காரை விட்டு வெளியேறாமல் பார்க்கிங் பகுதியில் காத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹூண்டாய் ஐ20 கார் (HR 26CE7674) பிற்பகல் 3:19 மணிக்கு பார்க்கிங்கில் நுழைந்து, மாலை 6:30 மணியளவில் வெளியேறி, 6:52 மணியளவில் செங்கோட்டை அருகே வெடித்துள்ளது. சிசிடிவி காட்சிகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
காரின் உரிமையாளரிடம் இருந்து பல்வேறு நபர்கள் மூலம் கடைசியாக உமருக்கு கார் கைமாறியுள்ளது. அமீர் மற்றும் புல்வாமாவை சேர்ந்த தாரிக் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது.
உமரின் கூட்டாளிகளான டாக்டர் முஜம்மில் ஷகீல் மற்றும் டாக்டர் ஆதில் ராதர் கைது செய்யப்பட்டதாலும், ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாலும், உமர் பதற்றத்தில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே குண்டுவெடிப்பை தூண்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.