இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.50%-ஆக மாற்றாமல் அதே அளவில் நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு முதல் பாதியில் ரிசர்வ் வங்கி மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் ரெப்போ விகிதத்தை குறைத்திருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாத கூட்டத்தில் விகித மாற்றத்தை நிறுத்தியது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பில், வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, முன்னர் அறிவிக்கப்பட்ட விகித குறைப்புகள் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான வரிக் குறைப்புகள் ஆகியவற்றின் தாக்கம், சந்தையில் முழுமையாக வெளிப்படும் வரை காத்திருந்து பார்ப்பதே விவேகமானது என்று தெரிவித்தார்.
இந்த முடிவின் விளைவாக, ரூபாயின் மதிப்பு 88.75-ஆக ஓரளவு வலுவடைந்ததுடன், பங்குச் சந்தைக் குறியீடுகளும் சற்று ஏற்றம் கண்டன.