இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஒரு விமான ஓடுதளத்தையே, ஒரு தாய் தனது மகனுடன் சேர்ந்து முறைகேடாக விற்றுள்ளது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூருக்கு அருகில், பாகிஸ்தான் எல்லையோரம் பட்டுவல்லா என்ற கிராமத்தில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஒரு பழைய விமான ஓடுதளம் இருக்கிறது. 1962, 1965, 1971 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர்களின் போது, இந்த ஓடுதளம் மிக முக்கியமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமான ஓடுதளம் அமைந்திருக்கும் நிலத்தை, பஞ்சாபை சேர்ந்த உஷா அன்சால் என்ற பெண்மணியும், அவரது மகன் நவீன் சந்த் என்பவரும் முறைகேடாக விற்றுள்ளனர். இந்த மோசடி, முன்னாள் வருவாய்த்துறை அதிகாரி நிஷான் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, தாய் மற்றும் மகன் இருவர் மீதும் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மோசடி குறித்த முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பஞ்சாப் மாநில ஊழல் கண்காணிப்பு அமைப்புக்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த மோசடி குறித்து விரிவான மற்றும் தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.