புல்வாமா தாக்குதல் செய்தி தெரிந்தபின்னும் ஆவணப்படத்திற்கானப் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக மோடி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போது இந்தியப் பிரதமர் மோடி ஆவணப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தார். அப்போது தாக்குதல் தொடர்பான செய்தி தெரிவிக்கப்பட்ட பின்னும் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதுன்ம் சோகத்தில் இருக்கும் போது பிரதமர் இது போல் செய்யலாமா எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்துக் காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, “புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்தது மாலை 3.10 மணிக்கு. ஆனால் பிரதமர் மோடி மாலை 6.40 மணி வரை படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார். நாடே வருத்தத்தில் இருந்தபோதும் கூட மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். இதுபோன்ற பிரதமர் உலகில் வேறெங்காவது இருக்கிறாரா?” என்றுகூறி சில புகைப்படங்களை வெளியிட்டார்.
இதற்கு அரசு தரப்பில் இருந்து இப்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘ தாக்குதல் தொடர்பாக தாமதமாகவே மோடிக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனால் மோடி மிகவும் கோபப்பட்டார். அதன் பிறகு அவர் கலந்துகொள்வதாக இருந்த கூட்டத்தில் கூட சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு பிறகு டெல்லிக்கு சென்றுவிட்டார் ‘ எனப் பதிலளித்துள்ளது.