பீகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரூ.13 ஆயிரம் கோடிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
பீகாரில் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்டவற்றால் பரபரப்பாக நிலவி வருகிறது பீகார் அரசியல் களம். இந்நிலையில் இன்று பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளார்.
8.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு அவுண்டா - சிமாரியா இடையே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பல்வேறு துறைகளின் கீழ் பீகாரின் வளர்ச்சிக்காக ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார்.
பின்னர் பேசிய அவர் “பீகார் எல்லா சமயத்திலும் நாட்டின் முதுகெலும்பாக இருந்திருக்கிறது. இந்த புனித பூமியில் எடுக்கும் எந்த தீர்மானமும் வீண்போகாது. இங்கிருந்துதான் பஹல்காம் பயங்கரவாதிகளை தூள் தூளாக்குவேன் என சபதம் எடுத்தேன். அது நடந்தது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சி காலத்தில் பீகார் நகரங்கள் இருளில் மூழ்கி கிடந்தன. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எந்த பெரிய திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் தங்கள் பைகளை நிரப்புவதில் மும்முரமாக இருந்தார்கள்.
பீகார் இளைஞர்கள் தங்கள் மாநிலத்தில் வேலை பெறவும், மரியாதை கிடைக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக உழைத்து வருகிறது.
ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளை பதவியில் இருந்து நீக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் பிரதமரும் விதிவிலக்கல்ல. இனி எந்த தவறு செய்யும் அரசியல்வாதியும் தப்பிக்க முடியாது. எனவேதான் இந்த மசோதாவுக்கு ஊழல் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிடுகிறார்கள்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K