நடிகர் விஜய் தமிழக அரசியலுக்குள் நுழைவது குறித்து தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் என். தரணிதரன் "அசல் இருக்கும்போது, மக்கள் ஏன் நகலை தேடி செல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
திரை நட்சத்திரமான விஜய்யின் கூட்டங்கள் வாக்குகளாக மாறாது என்று என். தரணிதரன் வாதிட்டார். இதற்கு உதாரணமாக, ஆந்திர பிரதேசத்தில் பெரும் நட்சத்திரமான சிரஞ்சீவியின் அரசியல் பயணத்தை அவர் சுட்டிக்காட்டினார். சிரஞ்சீவிக்குக் கிடைத்த பெரும் மக்கள் கூட்டம் தேர்தலில் வாக்குகளாக மாறவில்லை. இதேபோல, திரைப்படத்தில் ஒரு பெரிய கூட்டத்தை ஈர்ப்பது என்பது அரசியலில் வாக்களிப்பதற்கான உறுதியான காரணியாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
விஜய் கட்சிக்குத் தேவையான அடிப்படை அமைப்பு மற்றும் வாக்குச்சாவடி அளவிலான கட்டமைப்பு இல்லை என்றும் எம்.ஜி.ஆர். தி.மு.க-வில் இருந்தபோது, அவருக்கு ஏற்கனவே ஒரு கட்சி அடித்தளம் இருந்தது. ஆனால், விஜய் அவ்வாறு அல்ல என்றும், திடீரென்று அரசியலுக்கு வந்துள்ளதாகவும் என். தரணிதரன் தெரிவித்தார். விஜய்யின் வருகை, எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்துடன் ஒப்பிடப்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்ற யூகங்களையும் என். தரணிதரன் நிராகரித்தார். தி.மு.க-வின் வாக்கு சதவீதம் 47% முதல் 53% வரை நிலையாக உள்ளது என்றும், எனவே, விஜய்யின் வருகையால் தி.மு.க-விற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.