பீகார் மாநிலத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைய தயாராக இருப்பதாக கூறியுள்ள ஓவைசி, "அந்த கூட்டணி என்னை சேர்க்காவிட்டால், தோல்வி அடைந்த பிறகு குழந்தைகள் போல் இந்தியா கூட்டணி கட்சிகள் அழக்கூடாது" என்று கிண்டலாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓவைசியிடம், "காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியாக இருப்பீர்களா?" என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், "அந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எங்கள் மாநிலத் தலைவர் முயற்சி செய்கிறார். முடிந்ததை சிறப்பாகச் செய்யுங்கள் என வாழ்த்து கூறியுள்ளேன். எங்கள் கட்சியை கூட்டணிக்கு சேர்க்காவிட்டால், அதன் பிறகு தோல்வி அடைந்த பிறகு குழந்தைகள் போல் அழக்கூடாது. தேர்தல் முடிந்தவுடன் தான் எங்கள் அருமை அந்த கட்சிகளுக்கு தெரியும்" என்று காட்டமாக தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி அழைத்தால் அவர்களுடன் கூட்டணி சேர தயாராக இருக்கிறேன் என்றும், பீகாரில் பாரதிய ஜனதாவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தான் விரும்பவில்லை என்றும் ஓவைசி கூறினார்.
ஒருவேளை இந்தியா கூட்டணி தனது கட்சியை கூட்டணியில் சேர்க்கவில்லை என்றால், தனித்து போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓவைசியின் இந்த சவால், பீகார் மாநிலத் தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.