உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதால், அவர் மருத்துவமனையின் தரையில் குழந்தையை பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற அப்பெண்ணை, ஏழை என்பதற்காக ஊழியர்கள் நாள் முழுவதும் கவனிக்கவில்லை என்றும், படுக்கை வசதிகூட வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பிரசவ வலி அதிகரித்த நிலையில், அதிகாலை 1.30 மணியளவில் பொதுமக்கள் நடமாடும் பகுதியிலேயே மறைவான இடம் கூட கிடைக்காமல் அப்பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்தத் துயர சம்பவத்திற்கு பிறகு, அங்கிருந்த சில செவிலியர்கள் கேலியும் கிண்டலுமாக பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி கண்டனங்கள் வலுத்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இரவு பணியில் அலட்சியத்துடன் செயல்பட்ட ஒப்பந்த மருத்துவர் சோனாலி உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அலட்சியமாக நடந்துகொண்ட இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளின் மனிதாபிமானமற்ற போக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.