கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
விஜய்க்கு தற்போதுள்ள 'Y' பிரிவு பாதுகாப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பாதுகாப்பை மாற்ற எந்த பரிந்துரையும் தற்போது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், சென்னை உயர் நீதிமன்றம் விஜய் மற்றும் கட்சியினர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை தொடங்கியுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் கேள்வியைத் தொடர்ந்து, விஜய்யின் பிரச்சார வாகனத்தைப் பறிமுதல் செய்ய நாமக்கல் காவல்துறையினர் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.