உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவை சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் காணாமல் போனது, அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாசியில் உள்ள தாராலி கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு, பெரும் நிலச்சரிவும் வெள்ளமும் ஏற்பட்டது. இதனால், ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து சுற்றுலா சென்ற 28 பேர் கொண்ட குழுவினர் இந்த நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தக் குழுவினர் நேற்று காலை உத்தரகாசியிலிருந்து கங்கோத்திரிக்கு சென்றதாகவும், அவர்கள் சென்ற வழியில்தான் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அவர்களுடன் எந்த தொடர்பும் ஏற்படவில்லை. இந்த குழுவினரை தேட வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயண ஏற்பாடுகளைச் செய்த நிறுவனத்திடம் விசாரித்தபோதும், அவர்களுக்கும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.