பிகாரில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் கட்டத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆட்சியைப் பிடிக்க 122 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில், பா.ஜ.க. கூட்டணி 19 இடங்களிலும், காங்கிரஸ் - ஆர்.ஜே.டி. கூட்டணி 10 இடங்களிலும் முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதில் பா.ஜ.க. மட்டுமே 14 இடங்களில் முன்னணியில் உள்ளது என்றும், முதலமைச்சர் நிதிஷ் குமார் கட்சி மூன்று இடங்களில் முன்னணியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி வரிசையில், ஆர்.ஜே.டி. 9 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன. மற்றவை இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளன. இது ஆரம்பகட்ட தேர்தல் நிலவரம் என்றாலும், இறுதி முடிவுகள் இதேபோல் இருக்குமா அல்லது மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.