போலே பாபா என்ற பிரபல இந்துமத சாமியார் ஆன்மீக சொற்பொழிவை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய போது, அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 121 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, பாபா அங்கிருந்து காரில் தப்பித்து விட்டதாகவும், தனது காலடி மண்ணை எடுக்குமாறு பாபா கூறியதனால் மக்கள் முண்டியடித்ததால்தான் இந்த நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. தற்போது, விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்றும், இந்த சம்பவத்தில் போலே பாபாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தவறான நிர்வாகம், அனுமதிக்கப்பட்ட இடத்தில் அதிகப்படியான கூட்டம் ஆகியவையே இந்த விபத்துக்கு காரணம் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.