மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச அரசு கூறிய நிலையில், சிவசேனா கட்சியின் எம்.பி. என்று நாடாளுமன்றத்தில் பேசிய போது, 2000 பக்தர்கள் வரை உயிரிழந்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கடந்த மாதம் 29ஆம் தேதி மௌனி அமாவாசை தினத்தில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்தது.
மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் உண்மையான எண்ணிக்கையை உத்தரப்பிரதேச அரசு மறைத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் காட்டிய நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் பேசிய சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், பிரயாக்ராஜில் கூட்ட நெரிசலில் 30 பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது.
ஆனால் அது உண்மையான எண்ணிக்கை அல்ல. கண்களால் பார்த்த சாட்சியங்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் படி, இந்த கூட்ட நெரிசலில் 2000 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த துயரத்திற்கு மோசமான மாநில நிர்வாகமே காரணம் என்றும், மற்ற நாடுகளில் இது போன்ற சம்பவம் நடந்திருந்தால் பிரதமர், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை இழந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சஞ்சய் ராவத் பேச்சுக்கு பாஜக எம்பிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கான புள்ளி விவரத்தை தர வேண்டும் என அவைத்தலைவர் கோரிக்கை வைத்தார். ஆனால் புள்ளி விவரத்தை சஞ்சய் ராவத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.