கர்நாடகாவில் மத காழ்ப்புணர்ச்சியால் தலைமை ஆசிரியரை பழிவாங்க இந்துத்துவா கும்பல் பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் பூச்சி மருந்து கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹுல்லிகட்டி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தண்ணீர் அருந்திய பிறகு உடல்நலமற்று மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 11 மாணவர்களுக்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நல்வாய்ப்பாக அனைவரும் பிழைத்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவர்கள் அருந்திய தண்ணீரில் பூச்சி மருந்து கலந்தது கண்டுபிடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் ஸ்ரீராம் சேனா என்ற இந்து அமைப்பை சேர்ந்த அதன் தலைவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அந்த பள்ளியின் முஸ்லீம் தலைமை ஆசிரியரை தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும், அவரை பணிமாற்றம் செய்ய அவர் மேல் கெட்டப்பெயரை ஏற்படுத்த இதை செய்தததாக கூறியுள்ளனர். இதை வன்மையாக கண்டித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா “மத அடிப்படைவாதமும், வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், அப்பாவி குழந்தைகளை கூட படுகொலை செய்ய வழிவகுக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாகும்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K