கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் இஸ்லாமியர் என்பதால், அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கொடுஞ்செயல் அரங்கேறியுள்ளது.
ஹூலிக்கட்டி பகுதியில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியராக கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் சுலைமான் கோரிநாயக். இவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வலதுசாரி அமைப்பை சேர்ந்த சிலர், பள்ளியின் குடிநீர் தொட்டியில் விஷத்தைக் கலந்துள்ளனர்.
விஷம் கலந்த தண்ணீரை குடித்த 12 மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அப்போதுதான், இந்த சம்பவம் பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உள்ளூர் ஸ்ரீ ராம் சேனை அமைப்பின் தலைவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 5-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் உடந்தையாக இருந்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர்கள், அந்த மாணவனிடம் விஷம் அடைக்கப்பட்ட ஒரு குப்பியைக் கொடுத்து, குடிநீர்த் தொட்டியில் கலக்குமாறு மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது, மத வெறுப்பின் காரணமாக நடைபெற்ற கொடுஞ்செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.