பிரதமர் மோடி ஜப்பானுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெறும் இந்த இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் டோக்கியோ சென்றுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது ஆகும். ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உடன் பிரதமர் மோடி பல்வேறு முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
மோடியின் வருகை, ஜப்பானின் முக்கிய முடிவுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியூயார்க் செல்லவிருந்த ஜப்பான் வர்த்தக அமைச்சர் ரியோசி அகாசாவா, தனது பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார். இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு இடையே வரிப் பகிர்வு மற்றும் சுமார்48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் பயண ரத்து குறித்து ஜப்பான் அரசு, அமெரிக்காவுடன் நிர்வாக ரீதியான சில முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலை, பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்துகிறது. இரு தலைவர்களின் சந்திப்பில் என்னென்ன புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.