பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில், பெற்ற குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்கள் தனியார் துப்பறியும் நிறுவனங்களை வைத்து கண்காணித்து வருவதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு போவதால், தற்போது தங்களுடைய டீனேஜ் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியவில்லை. கல்லூரிக்கு போவதாக சொல்லிக்கொண்டு அல்லது வேலைக்கு போவதாக கூறிக்கொண்டு, பல்வேறு கெட்ட பழக்க வழக்கங்களில் அவர்கள் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இதனை எடுத்து பெற்றோர்கள், துப்பறியும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க சொல்வதாகவும் இதற்காக தினமும் ₹5000 முதல் ₹10,000 வரை செலவு செய்வதாகவும் கூறப்படுகிறது.
கண்காணிப்பின் மூலம், ஒரு பெற்றோரின் மகன் சூதாட்டத்தில் ஈடுபடுவதும், இன்னொரு பெற்றோரின் மகன் நகைகளை அடமானம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதும், சிலர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதும், சிலர் முதிர் வயது பெண்களுடன் தொடர்பில் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனை அடுத்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்த அறிக்கையின் அடிப்படையில் கண்டிக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. பெற்ற குழந்தைகளையே துப்பறியும் நிறுவனங்களை வைத்து கண்காணிப்பது பெங்களூரு, மும்பை, சூரத், புனே உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.