திருப்பூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாயார் முயற்சி செய்த நிலையில், அந்த சிறுமி, குழந்தைகள் பாதுகாப்பு இலவச தொலைபேசி எண் 1098ஐ தொடர்பு கொண்டு தன்னுடைய நிலையை விளக்கியதால், அந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
குடும்ப சூழல் காரணமாக, 16 வயது சிறுமிக்கு அவரது தாயார் தனது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தார். ஆனால், சிறுமி தான் படிக்க வேண்டும் என்றும் இப்போது திருமணம் வேண்டாம் என்றும் கூறினார். இதை எதிர்த்த குடும்பத்தினர், அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தனர்.
இந்த நிலையில், வேறு வழியில்லாமல் அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி எண் 1098ஐ தொடர்பு கொண்டு தன்னுடைய நிலையை விளக்கினார். இதனை அடுத்து, கலெக்டர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறுமி மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்தனர்.
அப்போது, 18 வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்யக்கூடாது என்று சிறுமியின் பெற்றோருக்கு அறிவுறுத்தி, திருமணத்தை நிறுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.