கேரள மாநிலம் பாலக்காடு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவன் அர்ஜுன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, வகுப்பு ஆசிரியை ஆஷா மற்றும் தலைமை ஆசிரியை லிஸ்ஸி ஆகியோர் 20 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் ஆட்சேபனைக்குரிய செய்தி அனுப்பியதற்காக, வகுப்பு ஆசிரியை ஆஷா அவரை "சைபர் செல்லில் புகார் அளித்து, ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தருவேன்" என்று மனரீதியாக துன்புறுத்தியதே தற்கொலைக்கு காரணம் என்று குடும்பத்தினரும் மாணவர்களும் குற்றம் சாட்டுகின்றனர். ஆசிரியை மாணவனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் பெற்றோரின் போராட்டத்தை அடுத்து, பள்ளி நிர்வாகம் இரு ஆசிரியைகளையும் இடைநீக்கம் செய்துள்ளது. எனினும், தலைமை ஆசிரியை லிஸ்ஸி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். சமூக ஊடக பயன்பாடு குறித்து சாதாரண எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டதாகவும், வேறு பள்ளிக்கு மாற்றுவது குறித்த முடிவால் மாணவன் மன வருத்தத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அர்ஜுனின் குடும்பத்தினர் ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். காவல்துறையும் கல்வித் துறையும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.