கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.
மிரட்டல் வந்த உடனே, அலுவலக பணியாளர்களும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்ததும், தீயணைப்புத் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உள்ளிடும் குழுவினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து முழுமையான சோதனையை நடத்தினர்.
நடைபெற்ற விசாரணையின் முடிவில், எந்தவொரு வெடிகுண்டும் இல்லையென உறுதி செய்யப்பட்டதால், இந்த மின்னஞ்சல் மிரட்டல் போலியானதென அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த மின்னஞ்சலில், "ஆர்டிஎக்ஸ் வகை வெடிகுண்டு அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மதியம் 1.30 மணிக்கு அது வெடிக்கும்," எனவும், அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தாக்குதல் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மின்னஞ்சலை அனுப்பியவரை கண்டறியும் முயற்சியில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தவிர, கடந்த மாதம் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, வயநாடு ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்களுக்கும் இதே மாதிரியான போலி வெடிகுண்டு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டிருந்த சம்பவங்கள் நினைவுகூரத்தக்கவை.