டெல்லியில் 19 வயதான இளம் பெண் ஒருவர் ஆறு நாட்களாக காணவில்லை என்ற நிலையில், அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றும், எந்த சி.சி.டி.வி. காட்சியிலும் அவர் இல்லை என்றும், அவரது வங்கிக்கணக்கில் கூட பரிவர்த்தனை இல்லை என்றும் கூறப்படுவது அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சினேகா, டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த நிலையில், ஜூலை ஏழாம் தேதி திடீரென காணாமல் போனார். அவர் கடந்த நான்கு மாதங்களாக தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவில்லை என்றும், எந்த பொருளையும் எடுத்து செல்லாமல் திடீரென மாயமாகி விட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஜூலை ஏழாம் தேதிக்கு பின் அவரது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சினேகாவை இறக்கிவிட்ட கார் ஓட்டுநரை கண்டுபிடித்தபோது, அவரை பாலம் அருகே இறக்கிவிட்டதாக ஓட்டுநர் உறுதிப்படுத்தினார். ஆனால், சி.சி.டி.வி. கேமரா காட்சியில் சினேகா காரிலிருந்து இறங்கிய பிறகு அவரது நடவடிக்கையை கண்டுபிடிக்க முடியவில்லை.
காணாமல் போன சினேகாவை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு திரிபுரா முதலமைச்சரிடம் அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டதாகவும், காவல்துறைக்கு முதல்வர் சினேகாவை கண்டுபிடிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.