எத்தனால் கலந்த பெட்ரோலின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
எத்தனால் கொள்முதல் விலை பெட்ரோலை விட அதிகமாக இருப்பதால், விலையை குறைப்பது சாத்தியமில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் விளக்கத்தின்படி, ஜிஎஸ்டி மற்றும் போக்குவரத்துச் செலவு உட்பட, எத்தனாலின் சராசரி கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.71.50 ஆக உள்ளது. இது, பெட்ரோலின் விலையை விட அதிகம். எனவே, எத்தனாலை கலந்த பிறகு பெட்ரோல் விலையைக் குறைப்பது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவால், எதிர்காலத்திலும் எத்தனால் கலந்த பெட்ரோலின் விலை குறைய வாய்ப்பே இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது, சுற்றுசூழல் பாதுகாப்பிற்கும், அன்னிய செலாவணியை சேமிப்பதற்கும் ஒரு முக்கிய உத்தியாக பார்க்கப்படுகிறது.