கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து குலசேகரம் செல்லும் வழியில் உள்ள கீழ் பம்மம் என்ற கிராமத்தில், கடந்த இரண்டு நாட்களாக சில வீடுகளில் உள்ள கிணற்று நீரில் பெட்ரோல் வாசனை வீசுவதாக கூறப்படுகிறது. மேலும், அந்த நீரில் தீ பற்ற வைத்தால் எரிவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கீழ் பம்மம் பகுதியில் வசிக்கும் ஜெகன் என்பவரின் வீட்டுக் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் பெட்ரோல் போல இருப்பதாகவும், அதில் தீப்பொறி பற்ற வைத்தபோது அது வேகமாக எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோன்று, அப்பகுதியில் உள்ள மேலும் பல வீடுகளின் கிணறுகளிலும் பெட்ரோல் வாசம் வருவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீரின்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து அறிந்த பெட்ரோலியத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர், உடனடியாகப் பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த பகுதியில் பெட்ரோல் குழாய்கள் ஏதேனும் செல்கிறதா என்றும், அதில் இருந்து பெட்ரோல் கசிந்து கிணற்று நீரில் கலந்து விட்டதா என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள் வெளியான பின்னரே, இந்தச் சம்பவத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.