உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியில் அசைவ உணவகங்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஜியாபாத்தின் வசந்தாரா என்ற பகுதியில் உள்ள KFC உள்ளிட்ட அசைவ உணவகங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்று இந்து ரக்ஷா தல் என்ற அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பல அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது புனிதமான சாவன் மாதம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்தில் காவடிகள் எடுத்து புனித யாத்திரையை மேற்கொள்வார்கள். எனவே, இந்த மாதம் முழுவதும் அசைவ உணவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து அமைப்பு கூறி வருகிறது.
மாநில அரசு ஏற்கனவே காவடி யாத்திரை வழித்தடங்களில் உள்ள அசைவ உணவகங்களை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தற்போது, குடியிருப்பு பகுதிகள் மற்றும் சந்தைகளில் உள்ள அசைவ உணவகங்களையும் குறிவைத்து, அந்த உணவகங்களும் மூடப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்து அமைப்பின் இந்த செயலுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "உணவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், நீங்கள் இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இந்த உணவை உண்ண கூடாது என்று வற்புறுத்தக் கூடாது" என்றும் இந்த கட்சிகள் கூறி வருகின்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.