அமெரிக்காவுடனான வர்த்தக வரி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், "விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளன. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா கோரும் விவசாயம் மற்றும் பால் பொருட்கள் குறித்த சலுகைகளே. குறைந்த விலையுள்ள அமெரிக்க பால் மற்றும் வேளாண் பொருட்களை இந்திய சந்தையில் இறக்குமதி செய்வதற்கு இந்தியா அனுமதி அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இது இந்தியாவின் உள்நாட்டு விவசாய துறையை கடுமையாகப் பாதிக்கும் என்பதால், மத்திய அரசு இந்த கோரிக்கைகளுக்கு உறுதியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரான சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், "அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு நாம் அடிபணிய மாட்டோம். இந்திய விவசாயிகளின் கடின உழைப்பையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அவர்களுக்கு எதிரான எந்த ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திடாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.