சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வருமான வரி மசோதா அறிவிப்பு வெளியான நிலையில், இந்த மசோதா இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
கடந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரி சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 60 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா 622 பக்கங்கள் கொண்டதாக உள்ளது என்றும், இதில் புதிய வரிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் உள்ள வார்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் , நீளமான வாக்கியங்களுக்கு பதிலாக சிறிய வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளதால், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மசோதா மூலம், "முந்தைய மற்றும் மதிப்பீடு ஆண்டுகள்" என்பதற்குப் பதிலாக "வரி ஆண்டு" என்ற வார்த்தை மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த மசோதாவில் என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.