காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, கட்சி நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கும் நிலையில், அவரது மனைவி நவ்ஜோத் கௌர் சித்து பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவார் என்று அவர் உறுதியளித்தார்.
சித்துவிடம் பஞ்சாப்பை தங்க மாநிலமாக மாற்றும் திறன் இருந்தாலும், "ரூ.500 கோடி கொடுத்து முதல்வர் பதவியை வாங்க எங்களிடம் பணம் இல்லை" என்று நவ்ஜோத் கௌர் குற்றம் சாட்டினார்.
மேலும், பணம் கொடுத்து ஒரு நபர் முதல்வராக ஆனார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்கெனவே உட்கட்சிப் பூசல்கள் இருப்பதாகவும், ஐந்துக்கும் மேற்பட்ட முதல்வர் வேட்பாளர்கள் இருப்பதால், அவர்கள் சித்துவை முன்னுக்கு வரவிட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பா.ஜ.க.வில் சித்து இணைவது குறித்த கேள்விக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.