திமுகவின் கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் இருக்கிறது. கடந்த பல வருடங்களாகவே அனைத்து தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸுக்கு கணிசமான தொகுதிகளை திமுக ஒதுக்கி வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் திமுகவுடன் பேச்சுவார்த்தை காங்கிரஸ் துவங்கிவிட்டது.
கூட்டணி குறித்தும் எத்தனை தொகுதிகள் குறித்து என்பது பற்றியும் பேசுவதற்காகவே காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஐவர் குழு கடந்த 3ம் தேதி அறிவாலயம் சென்று திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் இந்த முறை அதிகமான தொகுதிகளை கேட்க திட்டமிட்டிருக்கிறது. ஆனால், திடீரென ராகுல் காந்தியின் வலதுகரமாக பார்க்கப்படும் பிரவீன் சக்கரவர்த்தி ரகசியமாக விஜயை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார். ஏற்கனவே விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க ராகுல் விரும்புகிறார் என்கிற செய்தி வெளியானது. எனவே, திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்கினால் காங்கிரஸ் தவெக பக்கம் செல்லுமா என்கிற சந்தேகமும், கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளரிடம் விளக்கமளிளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தவெக தலைவர் விஜயை சந்திக்க யாரோ போனார்கள்.. வந்தார்கள்.. அதுபற்றி எனக்கு தெரியாது.. திமுகவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது.. பின் கதவு வழியாக செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.. மக்களை சந்தித்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியிருக்கிறார்.