வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, அசாமில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, தன் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கும், அவதூறுகளுக்கும் பதிலடி கொடுத்தார். "என் மீது அவதூறு பரப்பினால், அந்த விஷத்தை நான் விழுங்குவேன், ஏனெனில் நான் சிவ பக்தன்" என்று அவர் உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டார்.
அசாமில் வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு பேசிய மோடி, "மோடி மீண்டும் அழுகிறார் என்று காங்கிரஸ் கூறலாம், ஆனால் மக்கள் தான் என் கடவுள். அவர்கள் என் முன் தங்கள் வலியை வெளிப்படுத்தவில்லை என்றால் நான் எங்கு செல்வேன்? அவர்கள் தான் எனது குரு, எனது கடவுள், எல்லாமே" என்று தெரிவித்தார்.
மேலும், "எனது தாயாரை வார்த்தைகளால் அவமதித்தார்கள். நான் ஒரு சிவ பக்தன். என் மீது பரப்பப்படும் வெறுப்பு என்ற விஷத்தை நான் விழுங்கி விடுவேன்" என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை சமாளிக்கும் தனது பாணியை, சிவன் ஆலகால விஷத்தை விழுங்கிய நிகழ்வுடன் ஒப்பிட்டு பேசிய அவரது கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.