முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று திடீரெனச் சந்தித்த சம்பவம் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ. பன்னீர்செல்வம், இன்று காலை சென்னை அடையாறு பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது, அதே பூங்காவிற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று ஒரு முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிடப் போவதாக ஓ. பன்னீர்செல்வம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பு எதிர்பாராமல் நடந்ததா அல்லது அரசியல் நோக்கத்தோடு திட்டமிடப்பட்டதா, ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணையப் போகிறாரா உள்ளிட்ட பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கான பதில்களை காலம் மட்டுமே வெளிப்படுத்தும்.