தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீரென சந்தித்துள்ள நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இணையுமோ? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். அவரது உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்ததாகவும், அவருடன் தே.மு.தி.க. பொருளாளர் சதீஷும் முதலமைச்சரை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இணைய போகிறது என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த சூழலில்தான், முதலமைச்சரை பிரேமலதா திடீரென சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்திருக்கலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தே.மு.தி.க. தனது மாநாட்டில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் நோக்கர்களின் கணிப்புப்படி, தி.மு.க.வுடன் தே.மு.தி.க. இணைந்தால், அது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று கருதப்படுகிறது.