குஜராத் மாநிலம் காந்திநகரை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் மூன்று மாதங்களுக்கு மேலாக சிறைபிடிக்கப்பட்டு, அவரிடமிருந்து ரூ.19 கோடிக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம், இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம், அந்த பெண் மருத்துவருக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார். அழைத்தவர், "உங்கள் போனில் ஆட்சேபகரமான தகவல்கள் உள்ளன. இதனால் உங்கள் மீது விசாரணை நடத்தப்படும். விசாரணை முடியும் வரை நீங்கள் 'டிஜிட்டல் கைது' முறையில் இருப்பீர்கள்," என்று மிரட்டியுள்ளார்.
மேலும், "உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டல்களால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவர், தனது வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த மொத்தப் பணத்தையும், கிட்டத்தட்ட 35 வங்கிக் கணக்குகளுக்கு பல தவணைகளாக அனுப்பியுள்ளார். அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.19 கோடி என்று கூறப்படுகிறது.
பல மாதங்களாக பணம் அனுப்பிய பிறகு, மோசடியாளர்கள் திடீரென அந்த பெண் மருத்துவருடனான தொடர்பை துண்டித்துள்ளனர். அதன் பின்னர்தான், இது ஒரு ஆன்லைன் மோசடி என்பதை அந்த பெண் மருத்துவர் உணர்ந்துள்ளார். உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண் மருத்துவரிடம் ரூ.19 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டிருப்பது, இதுவரை நடந்த டிஜிட்டல் கைது மோசடிகளிலேயே மிகப்பெரிய தொகையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.