ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் ரூ.35 லட்சம் செலுத்தி வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையின் டிஎன்ஏ தங்கள் டிஎன்ஏவுடன் பொருந்தவில்லை என புகார் அளித்ததையடுத்து, டாக்டர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தம்பதியினர் ஐதராபாத் டாக்டர் ஒருவரை தொடர்புகொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்து ரூ.35 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், டாக்டர் வாடகைத்தாயை ஏற்பாடு செய்து, குழந்தை நல்லபடியாக பிறந்ததாக கூறி குழந்தையை தம்பதியிடம் ஒப்படைத்துள்ளார்.
தம்பதியினர் குழந்தையின் டிஎன்ஏ-வை பரிசோதித்தபோது, அது தங்கள் டிஎன்ஏவுக்கு சற்றும் பொருந்தாமல் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி டாக்டர் மீது தம்பதியினர் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தம்பதியர் கொடுத்த விந்தணுவை வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தாமல், வேறொரு குழந்தையை டாக்டர் கொடுத்து ஏமாற்றியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கும்பலில் மேலும் சில சட்டவிரோத குழுக்கள் இருக்கலாம் என்று கூறப்படுவதால், காவல்துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.