டேராடூனில் உள்ள பாலத்தில் மாம்பழ லாரி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கவிழ்ந்ததும், பொதுமக்கள் சாக்குகள், கூடைகள், பைகள் ஆகியவற்றை கொண்டு வந்து மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டேராடூனில் உள்ள ரிஸ்பானா என்ற பாலத்தில் இன்று அதிகாலை மாம்பழங்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று திடீரென கவிழ்ந்தது. டிரைவர், கிளீனர் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், லாரியில் இருந்த மாம்பழங்கள் எல்லாம் சாலையில் சிதறிக் கிடந்தன. சிதறிக் கிடந்த மாம்பழங்களை அந்தப் பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அள்ளி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் பைகள், கூடைகள், சாக்குகளுடன் வந்து சிதறி கிடந்த மாம்பழங்களை சேகரிக்க தொடங்கினர்.
மூட்டை மூட்டையாக மாம்பழங்களை பொதுமக்கள் அள்ளி சென்றதை, லாரி டிரைவரும் கிளீனரும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்தனர். அந்த பகுதியில் சில மணி நேரம் ஒரு இலவச மாம்பழத் திருவிழா போலவே நடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, மாம்பழங்களை அள்ளி சென்ற பொதுமக்களை அப்புறப்படுத்தி, அதன்பின் பாலத்தில் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.