ஆந்திராவில், லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த காதலியை விபச்சாரத்திற்கு தள்ள காதலன் முயற்சி செய்ததும், அதற்கு அந்த காதலி மறுப்பு தெரிவித்த நிலையில், கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் உள்ள சித்தார்த்தா நகரில், புஷ்பா என்ற 22 வயது பெண், தனது கணவரை பிரிந்து கடந்த ஆறு மாதங்களாக ஷேக் ஷம்மா என்பவருடன் லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், ஷேக் ஷம்மா அடிக்கடி மது போதையில் புஷ்பாவிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும், திடீரென புஷ்பாவை பாலியல் தொழிலில் ஈடுபட வலியுறுத்தியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்ததாகவும் கூறப்பட்டது.
அந்த வகையில், இது போன்ற ஒரு வாக்குவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், ஷம்மா திடீரென ஒரு கத்தியை எடுத்து புஷ்பாவின் மார்பு மற்றும் கால்கள் ஆகிய பகுதிகளில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வந்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஷம்மா தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.