சிங்கப்பூரில் விடுமுறையை கழிக்க சென்ற இரண்டு இந்தியர்களான அரோக்கியசாமி டைசன் மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் ஆகியோர், இரண்டு பாலியல் தொழிலாளர்களை தாக்கி, கொள்ளையடித்த குற்றத்திற்காக, தலா ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனையுடன் 12 சவுக்கடிகள் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். கொள்ளையின்போது காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
ஏப்ரல் 26 அன்று, பாலியல் தொழிலாளர்களின் தொடர்பு எண்களை பெற்ற இருவரும், பணத்துக்காக அவர்களை விடுதி அறைகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். முதல் பெண்ணை சந்தித்து, அவரது கைகளை கட்டி, அறைந்து, அவரிடம் இருந்த ரொக்கம், நகைகள், ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
அதன்பின் இரண்டாவது பெண்ணை சந்தித்து, வாயை மூடி கத்த விடாமல் தடுத்து, ரொக்கம், இரண்டு கைபேசிகள், ஆகியவற்றை திருடி, திரும்ப வரும் வரை அறையை விட்டு வெளியேற கூடாது என்று மிரட்டினர்.
பாதிக்கப்பட்ட 2 பெண்கள் புகார் அளித்ததன் பேரில் இருவரும் பிடிபட்டனர். பொருளாதார சிரமங்களே கொள்ளைக்குக் காரணம் என்று இருவரும் நீதிபதியிடம் கருணை கோரினர். ஆனால் சிங்கப்பூர் சட்டப்படி, இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை மற்றும் சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்டது.