அசாம் மாநிலம் நல்பரி மாவட்டத்தை சேர்ந்த மணிக் அலி நீண்டகாலமாக எதிர்பார்த்த "சுதந்திரத்தைப்" பெற்றதாகவும், அதற்காக பால் குளியல் செய்ததாகவும் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் பதிவு செய்துள்ளார். அவர் தனது மனைவியிடம் இருந்து சட்டப்பூர்வமாக பிரிந்த மகிழ்ச்சியில் தான் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில், அலி தனது வீட்டின் வெளியே, ஒரு பிளாஸ்டிக் விரிப்பின் மீது நின்று கொண்டிருக்கிறார். அவரது அருகில் பால் நிரம்பிய நான்கு வாளிகள் வைக்கப்பட்டுள்ளன. அவர் ஒவ்வொரு வாளி பாலையும் எடுத்துத் தன் மீது ஊற்றி, தனது விவாகரத்தை கொண்டாடுவதை காண முடிகிறது.
இந்த முழு கொண்டாட்டத்தையும் கேமராவில் பதிவு செய்த திரு. அலி, "இன்றிலிருந்து நான் சுதந்திரமானவன்" என்று அறிவிப்பதையும் கேட்க முடிகிறது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பல்வேறு விதமான கருத்துகளை பெற்று வருகிறது.
என் மனைவி தனது காதலனுடன் தொடர்ந்து ஓடிவிட்டார். எங்கள் குடும்பத்தின் அமைதிக்காக நான் அமைதியாக இருந்தேன். இதற்கு முன்பும் அவர் குறைந்தது இரண்டு முறையாவது ஓடிவிட்டார். இப்போது எனக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தது என்று தெரிவித்தார்,.
மேலும் "நேற்று என்னுடைய வழக்கறிஞர் விவாகரத்து இறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். எனவே, இன்று எனது சுதந்திரத்தை கொண்டாட பால் குளியல் போடுகிறேன்," என்று அவர் வைரல் காணொளியில் தெரிவித்தார்.