தெலங்கானா மாநில அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரை சரிவரக் கவனிக்க தவறும் புகார்கள் அதிகரித்துவரும் நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை நேரடியாக அவர்களது பெற்றோரின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, அசாம் மாநிலத்தில் இதுபோன்ற ஒரு முன்னோடித் திட்டம் 'பிரணாம்' என்ற பெயரில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி, அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களை கவனிக்கத் தவறினால், அவர்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி பெற்றோரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.
அசாம் மாநிலத்தின் இந்த திட்டத்தை போலவே, தெலங்கானாவிலும் இதை செயல்படுத்துவது குறித்து விரிவான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்குமாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், பெற்றோர் புறக்கணிப்பு பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மட்டுமின்றி தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்