இந்தியாவும் பாகிஸ்தானும் போரிட்டுக்கொண்டிருந்தபோது அதை தான் தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலு இன்று முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இன்று காலை மக்களவை கூடியதும், ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின், பயங்கரவாதத் தாக்குதல்கள், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கின. ஆனால், இந்த நோட்டீஸை ஏற்க மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், தற்போது கேள்வி நேரம் தொடங்கும் என்றும் அறிவித்தார்.
இதனை அடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் மக்களவையை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 12 மணிக்கு மேல் மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது